• vilasalnews@gmail.com

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவர்களை மீட்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக மனு... மீனவர்கள் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல்!

  • Share on

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தருவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்கு துறையில் இருந்து இயக்கப்படும் விசைப் படகுகள், பல நாள் ஆழ்கடல் தங்கி மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த ஆர்.அந்தோனி மகாராஜா (45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் உ.ரமேஷ் (36), ம.ஸ்டீபன் (47), ஜெ.அருண் (19), அ.அந்தோனி தாதிஸ் (20), அ.ஜார்ஜ் ராமு (20), சிப்பிகுளம் கல்லூரணியைச் சேர்ந்த ஆ.சுப்பிரமணியம் (63), சோலைமுத்து (41), ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த இ.எத்தையாகுமார் (30), நரிப்பூரைச் சேர்ந்த து.மாரியப்பன் (52), பெரியபட்டணத்தைச் சேர்நத் மு.சுரேஷ் (39), பாறைக்குளத்தைச் சேர்ந்த முருகராஜ் (20) ஆகிய 12 மீனவர்கள் கடந்த மாதம் 21-ஆம் தேதி தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்றனர்.


அதேபோல் ஜெ.அந்தோணி தென் டேனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தருவைகுளத்தைச் சேர்நத் சே.மிக்கேல் ஆல்வின்(20), மா.டேனியல் சஞ்ஜெய்(25), சில்வர் ஸ்டார்(20), அ.மிக்கேல் டேனியல்ராஜா(25), தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த க.மாரி ஆனந்தன்(45), கீழ வைப்பாறைச் சேர்ந்த சூ.இன்னாசி(47), கீழ அரசரடியைச் சேர்ந்த அ.அழகுராஜா(28), வேம்பாரைச் சேர்ந்த அ.ஆரோக்கியனார்பட் (19), ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த இ.ராசீன்(45), இ.விஜயகுமார்(43) ஆகிய 10 மீனவர்கள் கடந்த மாதம் 23-ஆம் தேதி தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடல் தங்கி மீன்பிடிக்க சென்றனர்.


இந்த 2 விசைப்படகுகளும்  இலங்கைக்கு நடுநிலை எல்லை வழியாக சர்வதேச கடற்பகுதி பகுதியில் சென்றபோது சீரற்ற வானிலை, கடல் நீரோட்டங்கள் காரணமாக இலங்கை கடற்பகுதியில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளுடன் 22 மீனவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். 


இந்தநிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையிலான அதிமுகவினர், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.


மேலும், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததோடு, மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி, மீனவர்களின் விடுதலைக்கு உறுதுணையாக அதிமுக செயல்படும் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அப்போது, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

  • Share on

எப்போதும் வென்றான் அருகே வேன் கவிழ்ந்து விபத்து!

கார் டயர் வெடித்து விபத்து : மூதாட்டி உயிரிழப்பு;சிறுவன் உள்பட 2 பேர் காயம்!

  • Share on