சாத்தான்குளம் சார் பதிவாளர் அலுவலரத்திற்கு இன்று ( வெள்ளிக்கிழமை ) அதிகாரிகள் தாமதமாக வந்ததால் பத்திர பதிவுக்கு வந்த மக்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சாத்தான்குளம் சார் பதிவாளர் அலுவலகம் புதியதாக கட்டப்பட்டு வருவதால் இட்டமொழி சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை பத்திரபதிவு உள்ளிட்ட இதர காரணங்களுக்காக பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். ஆனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் உரிய அதிகாரிகள் வரவில்லை. இதனால் அதிகாரி வராததால் பத்திரபதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெறாததால் வந்திருந்த மக்களும் வெகு நேரம் காத்திருந்தனர். பகல் 12 மணி ஆகியும் அதிகாரிகள் வராததால் காத்திருந்த மக்கள் மேல் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதன்பின் மேல்அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் சார் பதிவாளர் அலுவலகததிற்கு அதிகாரி சுமார் 1.30 மணிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் பத்திரபதிவு உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றது. இதனால் நல்ல நேரத்தில் பத்திர பதிவு செய்ய வேண்டும் என காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். எனவே, சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து மக்களை காத்திருக்க வைக்காமல் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.