தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே கே.சண்முகபுரம் கிழக்குதெருவை சேர்ந்த கருப்பசாமி மனைவி அபிநயாதேவி (37). இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மேலும் கருப்பசாமி வாலசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மாலையில் பணிக்கு சென்றிருந்த தனது கணவர் கருப்பசாமிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பெரியதாழை கிராமத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு பெண் குழந்தையுடன் சென்று வருவதாக அபிநயாதேவி கூறியுள்ளார். இந்நிலையில் கருப்பசாமி தனது மாமியார் வீட்டிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு அபிநயாதேவி மற்றும் குழந்தை வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கருப்பசாமி அக்கம் பக்கத்தில் மற்றும் உறவினர்களிடம் விசாரித்து பார்த்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கருப்பசாமி ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் இன்று அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.