போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பானது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அறக்கட்டளையோடு இணைந்து தொடர் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஏழாவது வாரமாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு (கூட்டு அறக்கட்டளை) சார்பில் திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு, காவல் உதவி ஆய்வாளர் பகவத்ஜீ, இளையோர் திருக்குறள் பேரவை நிறுவனர் ஆதிநாராயணன், நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தின் இயக்குனர் அ.முத்துப்பாண்டியன், துளசி சோஷியல் டிரஸ்ட் இயக்குனர் எஸ். தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானபிரகாசி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் நகர்மன்ற துணை பெருந்தலைவர் ஏ.பி. ரமேஷ் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது பள்ளியின் நுளைவு வாயிலில் தொடங்கி நகர்மன்ற அலுவலகம், காமராஜர் சிலை, பாரத ஸ்டேட் வங்கி, வடக்கு ரதவீதி வழியாக வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. இப்பேரணியில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஹென்சன் பவுல்ராஜ், நகர்மன்ற ஆணையர் கண்மணி, உதவி தலைமை ஆசிரியர்கள் பாலகணேஷ், விமலா, தமிழ் ஆசிரியர் ஜெபஸ்டின், ஒன்பதாவது வார்டு உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் போதைப் பொருட்களுக்கு எதிராக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக பள்ளியின் பசுமை படை ஆசிரியர் ஆஷா லத்திகா நன்றி கூறினார். பேரணிக்கான ஒருங்கிணைப்பு பணியை பதிவு எழுத்தர் சங்கரநயினார் செய்து இருந்தார்.