2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக மெகா கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இது குறித்து கோவில்பட்டியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சட்டம் - ஒழுங்கு மிகப்பெரிய அளவுக்கு சீர்குலைந்து, அனைத்து மாவட்டங்களிலும் எதாவது ஒரு இடத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்து தான் வருகின்றது. இதற்கு அடிப்படையாக இருக்கக்கூடியது மது மற்றும் போதை வஸ்துகள் தான்.
2016-21 ஆம் ஆண்டு வரை எதிர்கட்சியாக இருந்தபோது பூரண மதுவிலக்கை கேட்டு திமுக பல போராட்டங்களை நடத்தியது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர், படிப்படியாக மதுக்கடைகள் குறைப்போம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, இப்போது எண்ணற்ற தனியார் மதுபான பார்களுக்கு அனுமதியளித்தும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளனர். இவை தான் தமிழ்நாட்டில் அதிகமாக கொலைகள் நடப்பதற்கு காரணமாக உள்ளது.
மேலும், கிராமப்புறங்களிலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இனியாவது விழித்துக் கொண்டு தமிழக அரசு சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கை சீரமைப்பதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். சாதி ரீதியான அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், தீண்டாமைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். கிராமக் கோயில்களில் தீண்டாமை இருந்தால் அவை ஒழிக்கப்பட வேண்டும்.
தென் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் தொழில் வளங்களைப் பெருக்க வேண்டும். தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்னும் இரண்டொரு மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
திமுகவின் அருந்ததியர் இட உள் ஒதுக்கீடு திட்டத்தின் காரணமாக கடந்த 14 ஆண்டுகளில் மிகப் பெரிய சமுதாயங்களான தேவேந்திர குலவேளாளரும், ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 1.5 கோடி பேரும் பாதிப்படைந்துள்ளனர். இதைவிட சமூக அநீதி இந்த நூற்றாண்டில் வேறு எதுவும் கிடையாது. இதுகுறித்து எந்தவொரு அரசியல் கட்சியும் உண்மைத்தன்மையை அறியாமல் எந்திரத்தனமாக உள் இட ஒதுக்கீட்டு ஆதரவு என அறிக்கை அளிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு, இந்திய அரசியல் சாசனத்தால் தேவேந்திர குலவேளாளருக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் அதில் உள்ள 76 சாதிகளுக்கும் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை பறித்து மற்றவர்களுக்கு வழங்குகிறது. அவர்களுக்கு 3 சதவீதம் கொடுப்பதை பற்றி எந்தவித ஆட்சேபணையும் கிடையாது. ஆனால், இடஒதுக்கீட்டை அமலாக்கிய முறை தவறானது. இதுகுறித்து சென்னையில், பாதிக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களின் கூட்டத்தை கூட்ட உள்ளோம்.
சென்னையில் உள்ள பல ஐஏஎஸ் அகாடமிகளில் இப்போது பதவியில் உள்ள அதிகாரிகள் அல்லது ஓய்வுபெற்ற அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன. எனவே, குரூப் 1, குரூப் 2 போன்ற பதவிகளுக்கு வினாத்தாள்கள் நிச்சயமாக அந்த மையங்களில் இருந்து தான் வெளியாகிறது. அந்த மையங்களில் படிக்கின்றவர்கள் தான் வேலை வாய்ப்புக்குச் செல்கின்றனர். மிகப்பெரிய இந்த முறைகேடுகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றன. எனவே, அடுத்தவர்களை குறை சொல்வதற்கு முன் தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளை தடுக்க வேண்டும்.
புதிய தமிழகம் கட்சி தேர்தல் மூலமாக மட்டுமே சமுதாய மாற்றத்தை உருவாக்க வேண்டுமென உருவாக்கப்பட்ட கட்சி கிடையாது. தேர்தல் என்பது ஒரு களம். சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் எல்லோருக்கமான குரல் இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அதில் பங்கேற்கிறோம். அரசியல் அதிகாரத்தில் பங்குபெற நினைக்கிறோம்.
2019, 2021-ம் ஆண்டு தேர்தல்களில் நாங்கள் சேர்ந்த கூட்டணி வெற்றி பெறக்கூடிய அளவுக்கு வலுவானதாக அமையவில்லை. மற்றபடி புதிய தமிழகம் கட்சி சமரசம் இல்லாமல் எடுத்த கொள்கையில் வலுவாக போராடி உள்ளது. இப்போதும் கூட மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராக நானே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து, ஆஜராகி உள்ளேன்.
தமிழ்நாட்டில் சமுதாய ரீதியாக அதிக வெற்றி பெற்றிருக்கக்கூடிய கட்சி புதிய தமிழகம் கட்சி தான். 2026-ம் ஆண்டு தேர்தல் தொடர்பாக இப்போது சொல்லமுடியாது. ஆனால், ஆளும்கட்சிக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.' இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, மாவட்ட துணைச் செயலாளர் அதிக்குமார் குடும்பர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.