ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்த தமிழக முதல்வரின் அறிவிப்பை, உடனடியாக அமல்படுத்தக் கோரி ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி எம்.எஸ். ராஜா, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டபோது, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பினர், ஜாதி, மதம் கடந்து தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை ஏற்படுத்திய பீட்டா அமைப்பை கண்டித்தும், அவசரச்சட்டம் ஏற்படுத்தி தடையின்றி ஜல்லிக்கட்டு நடத்திட போராட்டம் நடத்தியதன் விளைவாக, தமிழக அரசு திறம்பட செயல்பட்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க அவசர சட்டம் பிறப்பித்தது.
அப்போது, தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் போது பல்வேறு மாவட்டங்களில் போராடிய பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை தமிழக காவல்துறையால் போடப்பட்டது.
இதில் எண்ணற்ற தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில், நேற்று 5.2.2021 நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில், ஜல்லிக்கட்டு போராட்டம் வழக்குகளை வாபஸ் பெறுவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்து இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், இந்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக மக்கள் சார்பாகவும் ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பாகவும் வேண்டுகிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், துணை முதல்வர் அவர்களுக்கும், மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.