கிராமங்கள் வழியாக அரசு பஸ் இயக்கக்கோரி அறிவிக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக நடந்த சமாதான கூட்டத்தில் கோரிக்கை ஏற்கப்படாததால் உடன்பாடு ஏற்படவில்லை.
சாத்தான்குளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அமுதுண்ணா குடி, நெடுங்குளம், துவர்குளம் வரிப்பிலான் குளம், கோமாநேரி வழியாக மாணவர்கள் பொதுமக்கள் வசதிக்காக காலை, மாலை இரு நேரம் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து கிராம மக்கள் மனுநீதிநாள், ஜமாபந்தி முகாம் உள்ளிட்ட முகாம்களிலும், அதிகாரிகளுக்கும் மனு அளித்து வந்தனர். ஆனால் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்து துறை அதிகாரிகளை கண்டித்து வரும் 15ஆம் தேதி கலுங்கு விளை வரிப்பிலான்குளம் கிறிஸ்தவ ஆலயம் முன்பு, கோமானேரி, நெடுங்குளம், கொம்பன் குளம், புதுக்குளம், அமுதுண்ணா குடி ஆகிய ஐந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடப்பதாக முடிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை அடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.
திருநெல்வேலி போக்குவரத்து துறை மண்டல மேலாளர் கண்ணன் பங்கேற்றார். பேச்சுவார்த்தையில் பஞ்சாயத்து தலைவர்கள் நெடுங்குளம் சகாய எல்பின், கோமானேரி கலுங்கடி முத்து, புதுக்குளம் பாலமேனன், அமுதுண்ணா குடி முருகன், கொம்பன் குளம் வயணப்பெருமாள், தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி மேற்கு மாவட்ட தலைவர் முரசொலி மாறன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் போக்குவரத்து துறை சார்பில் நெல்லை கோட்டத்தில் குறைவான பஸ்கள் உள்ளன எனவும், அதுவும் தேவையான கிராம மக்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது எனவும், தற்போது நகர பேருந்துகள் புறநகர் பேருந்துகள் கூடுதலாக இயக்க வாய்ப்பில்லை.
அரசு ஒப்புதல் பெற்றபின் இயக்கிட நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை கிராம மக்கள் ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தனர். இன்று 8ம் தேதி போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளைக் கொண்டு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.