வல்லநாடு துப்பாக்கி சூடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் பங்கேற்று மயங்கி விழுந்த தென்காசி ஆயுதப்படை போலீஸ் காரர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் தென் மாவட்ட போலீஸ்காரர்களுக்கான கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 17ஆம் தேதி போலீஸ்காரர்களுக்கான 55 நாள் கமாண்டோ பயிற்சி துவங்கியது. இதில் தென்காசி மாவட்டம், சத்திரம் பட்டி தாலுகா குலசேகரன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பசுபதி மாரி ( 28 ) என்பவர் தென்காசி ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், பசுபதி மாரி வல்லநாட்டில் நடந்து வரும் கமாண்டோ பயிற்சியில் கலந்து கொண்டார். கடந்த 5ம் தேதி கமாண்டோ பயிற்சியில் ஒரு பகுதியாக 16 கிலோமீட்டர் ஓட்டப்போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற பசுபதி மாரி வல்லநாடு துப்பாக்கி சூடு தளம் அருகே குடிநீர் வடிகால் வாரிய கட்டடம் அருகே ஓடிய போது மயங்கி விழுந்தார். வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். போலீசார் விசாரணையில் உடல்நல குறைவால் இருந்தது தெரியவந்தது.
மேலும், இது சம்பந்தமாக ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர் ,முறப்பநாடு காவல் ஆய்வாளர் ரமேஷ் மோகன் விசாரித்து வருகின்றனர். இறந்த போலீஸ்காரருக்கு பசுபதி மாரிக்கு மாரிச்செல்வி என்ற மனைவி உள்ளார்.