தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மழை இல்லை என்பதால் ராபி பருவத்திற்கான விவசாய பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வந்தனர்.
இந்த சூழலில் நேற்றும் காலை முதல் மாலை வரை வழக்கமான வெப்பத்தின் தாக்கம் இருந்த போதிலும் மாலையில் எட்டையபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. எட்டயபுரம் மட்டுமின்றி அயன் ராசா பட்டி மேலக்கரந்தை, சிந்தலக்கரை, மாசார்பட்டி முத்தலாபுரம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
எட்டயபுரம் நகர் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக எட்டயபுரம் பஜார் பகுதியில் முழங்கால அளவிற்கு தண்ணீர் கடைகளுக்குள் பெருக்கெடுத்து ஓடியது. வாறுகால்கள் சரிவர சுத்தம் செய்யப்படாத காரணத்தினால் மழைநீருடன், கழிவுநீரும் கடைகளுக்குச் சென்றதால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இனியாவது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.