தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டத் தலைவர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வட்டச் செயலாளரின் ஜார்ஜ் ஆசீர்வாதம், மாநில பொருளாளர் நாகப்பன், மாநிலச் செயலாளர் வெயில் முத்து, மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மாநிலத் துணைத் தலைவர் வேல் குமார், வட்டத் துணைச் செயலாளர் முத்துப்பாண்டி, இணைச் செயலாளர் குமரவேல், கௌரவ ஆலோசகர் முனியசாமி உட்பட ஏராளமான கிராம உதவியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளான, அரசாணை 33-ல் உரிய திருத்தம் செய்து கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்த கிராம உதவியாளர்களுக்கு CPS இறுதித் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், கிராம உதவியாளர்களை வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பணி செய்ய கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.