ஏரல் அருகே கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு புகைப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மலர் தூவி அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் பாலு கடந்த 01.02.2021 அன்று கொலை செய்யப்பட்டு வீர மரணமடைந்தார்.
அவரது சொந்த ஊரான முடிவைத்தானேந்தலில் உள்ள அவரது வீட்டிற்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று (06.02.2021) நேரில் சென்று பாலு அவர்களின் புகைப் படத்திற்கு மரியாதை செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின் அவரது மனைவி பேச்சியம்மாள், மகன் அருண் வேலாயுதம், மகள் ஜெயதுர்க்கை வேணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் லெட்சுமணப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள் சண்முகவேல், ஜவகர், ராமசாமி, சுப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.