ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடம் தேடி கோரிக்கைகளை பெற்று அவர்களுக்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று ஓட்டப்பிடாரம், குமரெட்டியாபுரம், கச்சேரி தளவாய்புரம், பாஞ்சாலங்குறிச்சி, கவர்னகிரி, வெள்ளாரம், அகிலாண்டபுரம் ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு பொதுமக்களின் மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதையும் பார்வையிட்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். இம்முகாமில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் சாந்தி, வட்டாட்சியர் சுரேஷ் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுசிலா, நில எடுப்பு வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா மத்திய கூட்டுறவு வங்கி களமேலாளர் பால்சாமி, கூட்டுறவு சார்பதிவாளர் பாலமுருகன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.