சாத்தான்குளம் அருகே கோவில் வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் உடலை போலீசார் மீட்டுள்ளனர். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் உள்ளதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள கடாச்சபுரம் சண்முகபுரத்தை சேர்ந்தவர் இசக்கி பாண்டி மகன் சுந்தர் ( 30 ) புனேயில் உள்ள அவரது உறவினர் கடையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஊரில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் பண்ண பாறையில் நடைபெற்ற கபடி போட்டியை பார்க்க சென்ற அவர் பன்னம்பாறை சுப்பராயபுரம் இடையே உள்ள சாஸ்தா கோயில் வளாகத்தில் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சாத்தான்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அவரது உறவினர்கள் சுந்தர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என தெரிவித்து சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் காமராஜ் சிலை முன்பு இறந்த உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்ய போவதாக அறிவித்து வந்தனர். இதனை அறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் யேசு ராஜசேகரன், உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் பிரேத பரிசோதனை அறிக்கை தரப்பட்ட பின்னர் தற்கொலையா வேறு காரணம் என்று தெரியவரும் என தெரிவித்தனர். இதனை மறுத்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சண்முகபுரம் சென்றனர். இதனைத் தொடர்ந்து போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.