தூத்துக்குடி பக்கிள் ஓடையில் கார் பாய்ந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி நான்காம் கேட் அருகில் பக்கிள் ஓடையை ஒட்டிய பண்டுகரை சாலையில் இன்று இரவு அண்ணாநகர் பகுதியில் இருந்து காரில் ஒன்றில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தூத்துக்குடி சுந்தரவேல் புரம் பகுதியை சேர்ந்த வேல்ராஜ் என்பவர் தனது நண்பர்களான அண்ணாநகரைச் சேர்ந்த சதீஷ் , புதியம்புத்தூரை சேர்ந்த அபிஷேக், முத்து கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த இசக்கி ராஜ் மற்றும் திரேஷ் நகரை சேர்ந்த அருண் அபினேஷ் ஆகியோருடன் மாதா கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக சென்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கிள் ஓடை தடுப்பு கம்பியை இடித்து தள்ளிவிட்டு ஓடையின் உள்ளே கார் பாய்ந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. உடனே, அப்பகுதி மக்கள் மத்தியபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
மேலும் அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து காரின் உள்ளே இருந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், படுகாயமடைந்த வேல்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.