ஸ்ரீவைகுண்டத்தில் ஏடிஎம் மையத்திற்கு வந்த பெண்ணிடம் நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லக்குளம் அரியநாயகபுரத்தை சேர்ந்த களுங்கன் என்பவரது மனைவி லதா (46). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியோடு இணைந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது லதாவுக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தரச் சொல்லி உள்ளார்.
பணத்தையும் எடுத்துக் கொடுத்து ஒரு ஏடிஎம் கார்டையும் லதாவிடம் அந்த மர்ம நபர் கொடுத்து இருக்கிறார். அதனை வாங்கிச் சென்ற லதாவிற்கு சில நாட்களில் அவரது செல்போனுக்கு அவரது வங்கிக்கணக்கில் இருந்து 3 ஆயிரத்து 500 ரூபாய் எடுத்துள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. இது குறித்து வங்கி பணியாளர்களிடம் லதா கேட்டபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து இந்த 3 ஆயிரத்து 500 மட்டுமல்லாமல் அவ்வப்போது ரூபாய் 29 ஆயிரம் வரை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த லதா தனது பணம் திருடப்பட்டது குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் தலைமையிலான போலீசார் வங்கியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு நூதன முறையில் பெண்ணிடம் ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.