சாத்தான்குளம் அருகே சாலையில் நின்ற பழுதான டிராக்டர் மீது அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதில் செல்போன் கடை ஊழியர் பலியானார். பழக்கடை வியாபாரி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மோசஸ் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ஸ்ரீ மனோ ரஞ்சித் ( வயது 20 ).இவர் சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் ஊர் செண்று திரும்புவது வழக்கம். அதேபோல் அவரது பைக்கில் வீடு திரும்பினார். பன்னம்பாறை நாசரேத் செல்லும் சாலையில் அங்குள்ள சாய்பாபா கோயில் அருகே சாலையில் பழுதாகி நின்ற டிராக்டர் மீது ஸ்ரீ மனோ ரஞ்சித் ஓட்டி வந்த பைக் மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
அதே போல் சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வரும் வடலி விளையை சேர்ந்த பொன் பாண்டி மகன் சக்திவேல் ( வயது 36 ) பணி முடிந்து அவரது பைக்கில் அவர் ஊருக்கு திரும்பினார். டிராக்டர் பழுதாகி நிற்பது தெரியாமல் டிராக்டர் மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஸ்ரீ மனோரஞ்சித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் இரு விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.