தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் எட்டயபுரம் சாலையில் தலைமை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தொழிலாளர்கள் தலைமை தபால் அலுவலகத்தினை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பதிவு தபால் அனுப்புவதற்கு அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பதிவு தபால் அனுப்பும் பகுதியில் சமீபகாலமாக அந்த பிரிவில் வட மாநிலத்தை சேர்ந்த ஊழியரை (மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பாண்டே) பணியில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த ஊழியருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியவில்லை, ஹிந்தி மட்டும் தெரிவதால் பதிவு தபால் அனுப்ப வருபவர்கள் அனுப்ப முடியாமல் திரும்பி செல்லும் நிலை உள்ளது. நேற்றும் அந்த வட மாநில ஊழியர் பணியில் இருந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் பரத் என்பவர் பதிவு தபால் அனுப்ப சென்ற போது தமிழ், ஆங்கிலத்தில் இருந்தால் பதிவு தபால் அனுப்ப முடியாது. ஹிந்தியில் இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். தனக்கு தமிழ், ஆங்கிலம் டைப் செய்ய தெரியாது என்று அலட்சியமாக கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கறிஞர் பரத் மற்றும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதிவு தபால் அனுப்ப முடியாமல் பரிதவித்துள்ளனர். இதையடுத்து அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, இது குறித்து தலைமை தபால் அலுவலக அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இதன் பின்னர் தமிழ் தெரிந்த ஊழியரை வைத்து பதிவு தபால் வாங்கி அதற்கான ரசீது வழங்கியுள்ளனர்.
பொதுவாக பதிவு தபால் அதிகளவு அரசு அலுவல் தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம் தெரியாமல் ஹிந்தி தெரிந்தவரை மட்டும் பணியில் அமர்த்தி உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும், இனி இது போல் நடக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
நேற்று ஒரு நாள் மட்டுமே அவர் பணியில் அமர்த்தபட்டதாகவும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அந்தப் பிரிவில் பணி செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும், இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.