முதலூர் பள்ளி மாணவர்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து சித்த மருந்து, மாத்திரை, லேகியங்கள் வழங்கப்பட்டது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை சார்பாக இளைய சமுதாயத்தினரின் திறன் மேம்பாட்டிற்காக வளர் இளம் பருவத்திலே அவர்களுக்கான நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் அறிவு வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜசெல்வி உத்தரவின் படியும், தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் டாக்டர்.பொற்செல்வன் ஆலோசனையின் பேரிலும் முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு மூலம் முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ரத்த சோகையை நீக்கும் நெல்லிக்காய் லேகியம், ஞாபக திறனை அதிகரிக்க வல்லாரை மாத்திரையும், வளரிளம் பெண்களுக்கான ஹார்மோன் குறைபாடுகளை நீக்கும் பெமிக்யூர் மற்றும் குமரிலேகியம் வழங்கப்பட்டது.
முகாமிற்கு தலைமை ஆசிரியர் டேவிட் எடிசன் தலைமை வகித்து பேசினார். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் வரவேற்றார். மாணவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை, பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை டாக்டர் ஜெகதீஷ் வழங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஐலின் சுமதி, முன்னிலை வகித்தார். சித்த மருத்துவ மருந்தாளுநர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
இதேபோன்று பிற மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஒரு வருடத்திற்குள் மூன்று சுற்று மாத்திரைகள், லேகியங்கள் வழங்கப்படும் என சித்த மருத்துவத் துறையினர் தெரிவித்தனர்.