• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் தோல்வி : எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது இதுதானாம்!

  • Share on

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்தவகையில், தூத்துக்குடி மக்களவைத்தொகுதிக்கான அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களுமான கடம்பூர் ராஜூ மற்றும் சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது.


அதிமுக நிர்வாகிகள் பேசும்போது, நாங்கள் தேர்தலில் கடுமையாகத்தான் உழைத்தோம். ஆனால், திமுகவின் பணநாயகம் வென்றுவிட்டது. அதனால் நமது அதிமுக வேட்பாளர் தோல்வியைச் சந்தித்தார். என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், திருச்செந்தூர் தொகுதிக்கு தேர்தல் பணிக்கு சரியாக பணம் வரவில்லை என்று அத்தொகுதி நிர்வாகிகள் முதல் பல்வேறு நிர்வாகிகள் தரப்பில் போதிய அளவிற்கு தேர்தல் பணியாற்ற கட்சியினருக்கு பணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாம். வேட்பாளர் சிவசாமி வேலுமணியும் எங்கெல்லாம் தனக்கு தேர்தல் வேலை செய்யவில்லை என்ற பட்டியலையும் வாசித்தாராம்.

சிறுபாண்மையினரின் ஓட்டுக்களை பெற தவறி விட்டோம் என்று முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கூற, அதிமுகவை விட சிறுபாண்மையினருக்கு யாரும் அதிகமாக செய்திருக்க முடியாது. இதெல்லாம் காரணம் காட்டமுடியாது என்று கூறி அவரை நோஸ்கட் செய்து,  விட்டாராம் எடப்பாடி.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் மீனவ சமூகத்தை சேர்ந்த இளம் பெண் ஸ்னோலின் இறப்பு உள்ளிட்ட விவகாரங்களால் மீனவர்களின் வாக்குகள் தூத்துக்குடியில் அதிமுகவிற்கு சரிவை தந்துள்ளதாக தூத்துக்குடி தெற்குமாவட்டம் சார்பில் விளக்கம் சொல்லப்பட்டதாம்.

தூத்துக்குடி மக்களவைத்தொகுதியை பொறுத்தவரை மீனவ சமுதாய மக்களின் வாக்குகள் மிகப்பெரிய பலம். அவை எப்போதுமே அதிமுக வாக்குகள் தான். அதை நாம் ஒருபோதும் தவறவிடக்கூடாது என்று கூறியதோடு, அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்காக செய்ததை பட்டியலிட்டு இதையெல்லாம் நிர்வாகிகள் நீங்கள் அம்மக்களிடம் எடுத்து கூறுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினாராம்.


மேலும், அதிமுக அரசின் சாதனைகளை நிர்வாகிகள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கத் தவறிவிட்டனர். அதனால்தான் நாம் இந்தத் தேர்தலில் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். எனவே, நிர்வாகிகள் அனைவரும் அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். கட்சியின் மிகப்பெரிய பலம் அடிப்படை நிர்வாகிகளான கிளைக்கழகச் செயலாளர்கள் தான். ஆகவே அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சி கட்டமைப்பை வலிமையோடு வைத்திருங்கள். இளைஞர்களுக்கு கட்சி பணியாற்றும் ஆர்வத்தை அவர்களிடத்தில் உருவாக்குங்கள் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

வரும் உள்ளாட்சி தேர்தலும், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலும் நமக்கான வெற்றி தேர்தலாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து பணியாற்றுங்கள். கூட்டணி விவகாரங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று முடித்தாராம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

இக்கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், பெருமாள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் தற்கொலைக்கு முயற்சி செய்ய வைத்து அதனை வீடியோ எடுத்து வெளியிட முயன்றதாக யூடியூபர் கைது!

தூத்துக்குடி தெற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் : மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்!

  • Share on