ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் முதற்கட்டமாக ஓட்டப்பிடாரம் யூனியனுக்கு உட்பட்ட 38 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகளையும், பழுதடைந்த வீடுகளை பழுது நீக்கம் செய்வதற்கு 108 பயனாளிகளுக்கு அதற்கான ஆணைகளையும், கடந்த வருடம் பெய்த கனமழை காரணமாக வீடுகளை இழந்த 40 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார்.
தொடர்ந்து எம்எல்ஏ சண்முகையா பேசுகையில், இந்தியாவிலேயே கனமழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் கொண்டு வந்திருக்கிறார். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கனமழையால் 40க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதில் அதிகாரிகள் ஆய்வு செய்து 10 நபர்களுக்கு மட்டுமே வீடு கட்டும் திட்டத்தில் சேர்த்துள்ளனர். ஒரு சில கிராமங்களில் அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனமழையால் வீடுகளை இழந்தவர்கள் குறித்து பயனாளிகளை ஆய்வு செய்து முழுமையாக கண்டறிந்து அவர்களுக்கும் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், யூனியன் ஆணையாளர் வசந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, பணி மேற்பார்வையாளர்கள் சங்கர், பரமசிவன், பாலசுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் திமுக நகர செயலாளர் பச்சை பெருமாள், மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுடலைமணி, அய்யாதுரை, கிருஷ்ணவேணி, கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.