ஓட்டப்பிடாரம் அருகே பரிவில்லிக்கோட்டையில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார்.
பின்னர் பொதுமக்களிடையே சண்முகையா எம்எல்ஏ பேசுகையில்:-
தமிழக முதலமைச்சர் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏற்கனவே காலனி வீடுகள் கட்டப்பட்டிருந்தால் அதனை பராமரிப்பு செய்வதற்காக அரசு சார்பில் ஒன்றரை லட்சம் வழங்கப்படுகிறது. எனவே காலனி வீடுகளை பராமரிப்பு பணி மேற்கொள்பவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் குடிசை வீடு, ஆஸ்பெஸ்டாஸ் வீடு, ஓட்டு வீடு, மண் வீடு உள்ளிட்ட வீடுகளில் வசிப்பவர்கள் முழுமையாக கலைஞரின் கனவு வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் பெற்று பயன்பெறலாம்.
மேலும் அருகில் உள்ள ஐந்து பஞ்சாயத்துகளை உள்ளடக்கி கிராமங்களில் மக்களோடு முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களால் அளிக்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும். எனவே பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.
கோவில்பட்டியில் இருந்து புளியம்பட்டி நோக்கி செல்லும் அரசு புறநகரப் பேருந்து பரிவில்லிக்கோட்டை கிராம வழியாக நான்கு முறை இயக்கப்படுகிறது. இதில் காலை 11 மற்றும் மாலை 3 மணி ஆகிய நேரங்களில் ஊருக்குள் வருவதில்லை என பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் உடனடியாக எம்எல்ஏ சண்முகையா போக்குவரத்துதுறை அதிகாரியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு காலை 11 மற்றும் பிற்பகல் 3 மணி ஆகிய இரு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளை பரிவல்லிக்கோட்டை ஊருக்கு சென்று திரும்புமாறு வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, பஞ்சாயத்து தலைவர் பெல்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.