தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, மேல ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். டீ வியாபாரம் பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு செல்லக்கூடிய பொதுப் பாதையை ஆக்கிரமித்து அவரது வீட்டு அருகே உள்ள பாலசுப்பிரமணியன் என்பவர் வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாம்.
இதனையடுத்து, பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பாஸ்கர், திடீரென தான் கேனில் மறைத்துக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.