விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பொதுப்பாதையினை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரியும், சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கான பொதுப்பாதை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி அமைத்துள்ளதை அகற்றிடவும், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கான 60 அடி அகலமும் 360 அடி நீளமும் கொண்ட முழு பாதையை மீட்க கோரியும், சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் மக்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மாணவர்களின் விளையாட்டு மைதானமாகவும், சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா மைதானமாகவும், தூய சகாய அன்னை ஆலய திருவிழா மைதானமாகவும், ஆதிதிராவிடர் விவசாயிகளின் களமாக ஆதிதிராவிட மக்கள் பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்த பழைய சர்வே எண் 206/02 புதிய சர்வே எண் 347/04 என்பதில் சுமார் 30 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் போலியாக ஆவணங்களை தயார் செய்து பத்திரப்பதிவு செய்து நீதிமன்றத்தை ஏமாற்றி பதிவு செய்த வழக்கில் போலி ஆவணங்கள் அடிப்படையில் தனிநபருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மேல்முறையீடு செய்திடக் கோரியும், 30 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி மக்களுக்கு பொது நூலகம், சமுதாய நலக்கூடம், கலையரங்கம் அமைத்துக் கொடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரியும், சுந்தரலிங்கபுரம் ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களின் அன்றாட வேலைகளை முடித்த பின் ஆதி பகவன் புத்தர் திடலில் தினமும் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஆதி திராவிட மக்கள் திட்டமிட்டு தினமும் நடத்தி வருகின்றனர்.
இந்தநிகழ்வில், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு துணை செயலாளர் மதுரை எல்லாளன், மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தொகுதி சடையாண்டி மற்றும் சங்கரலிங்கபுரம் பொதுமக்கள் என பலர் கொண்டனர்.