கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - சாத்தூர் ரோடு தனியார் கல்லூரி அருகே வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன்ராஜ் தலைமையில் தலைமை காவலர் முத்துமாரி, முதல்நிலை காவலர் ரமேஷ், காவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள வீட்டில் 16 மூடைகளில் புகையிலை பொருட்கள் பெங்களூரில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1.5 லட்சம் ஆகும். இதையடுத்து அவற்றை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்து அங்கு பதுக்கி வைத்திருந்த கோவில்பட்டி கடலைக்கார தெருவைச் சேர்ந்த காமராஜ் மகன் ரகுபதி (28), நாடார் பள்ளி தெருவைச் சேர்ந்த பூவலிங்கராஜா மகன் பாண்டிமணி (30) ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே போல், நாலாட்டின்புத்தூர் காவல்நிலையத்திற்குட்பட்ட காட்டுராமன்பட்டி கிராமத்தில் இரண்டு பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்து நாலாட்டின்புத்தூர் போலீசார் சென்று புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.