தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே வாஞ்சிமணியாச்சி சந்திப்பு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில்கள் பிரிந்து செல்லும்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக வாஞ்சிமணியாச்சி சந்திப்பு ரயில்வே நிலையம் ஆனது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பு ரயில்வே நிலையம் வழியாக தினசரி 50க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் பேசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காலத்திற்கு முன்னதாக சுமார் 40க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் பயணிகள் ரயில்களுக்கு வாஞ்சிமணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தம் இருந்த நிலையில் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ரயில்கள் நின்று செல்கிறது. இதனால் தூத்துக்குடியைச் சேர்ந்த ரயில் பயணிகள் மற்றும் ஓட்டப்பிடாரம் ரயில் பயணிகள் வாஞ்சிமணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அதேபோல் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட தூத்துக்குடி டூ மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை விரைவு ரயில்களுக்கும் வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்ட ரயில் பணிகள் அதில் குறிப்பாக ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர்கள் கோயம்புத்தூருக்கு தொழில் நிமித்தமாக சென்று வரவும் மற்றும் கோயம்புத்தூர் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளும் ரயில்களில் செல்ல முடியாமல் பேருந்துகளில் அதிக பணத்தை செலவழித்து செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது. எனவே தூத்துக்குடி டு மேட்டுப்பாளையம் விரைவு ரயில் மற்றும் சென்னை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களுக்கும் வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்க தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.