தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின்படி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.பொற்செல்வன் வழிகாட்டுதலின் பேரில் முதலூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் ஐலின் சுமதி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) டாக்டர் யமுனா சாத்தான்குளம் வட்டாரத்தில் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களுக்குமான தொழுநோய் குறித்த புத்தாக்க பயிற்சி அளித்தார்.
வரும் 2027ஆம் ஆண்டிற்குள் தமிழகத்திலிருந்து தொழுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டை நிறைவேற்றும் பொருட்டு முதலூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் களப்பணியாளர்களான இடைநிலை சுகாதார பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் ஆஷா பணியாளர்கள் ஆகியோருக்கு தொழு நோய் குறித்த புத்தாக்க பயிற்சி முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம் வரவேற்றார். துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) அலுவலக நலக்கல்வியாளர் செல்ல பாண்டியன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் நியூட்டன் பெர்னாண்டோ, சுகாதார ஆய்வாளர் மந்திரமூர்த்தி ஆய்வக நுட்பனர் பாலன் ஆகியோர் தொழுநோய் குறித்த விளக்க உரையாற்றினார்கள். மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மதிவாணன் நன்றி கூறினார்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழுநோய் பணிகளின் துணை இயக்குனர் டாக்டர்.யமுனா பேசும்பொழுது, தொழுநோய் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது, தொழுநோயின் வகைகள், மற்ற தோல் வியாதிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுத்தி பார்ப்பது மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும், ஆரம்ப நிலையில் சிகிச்சை மேற்கொள்ளுதல், உடல் ஊனத்தை தவிர்த்தல், நோய் பாதித்து முற்றிலும் குணமடைந்த நோயாளிகளுக்கான அரசு வழங்கும் உதவித் தொகை குறித்தும் விளக்கமாக பேசினார்.
இதில் முதலூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், படுக்கப்பத்து நிலைய சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன், ஆனந்தபுரம் சுகாதார நிலைய ஆய்வாளர் ஜெயபால், சமுதாய சுகாதார செவிலியர் மேரி செல்வி மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.