• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மீன் பதப்படுத்தும் ஆலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது எதனால்? ஆலை தரப்பு என்ன சொல்கிறது?

  • Share on

தூத்துக்குடி அருகே புதூர்பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமான நிலா சீ புட்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு அந்த ஆலையில் மின் விபத்து காரணமாக அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவி அங்கு பணியில் இருந்த 29 பேருக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மனோ பிரசன்னா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தீயை அணைத்தனர்.

இதைத்தொடர்ந்து, நிலா சீ புட்ஸ் நிறுவன வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பெண் ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் முரளி தலைமையிலான அதிகாரிகள், தடய அறிவியல் உதவி இயக்குனர் கலா லெட்சுமி, தலைமையிலான கைரேகை நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் தேவ சுந்தரம், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நிலா சீ புட்ஸ் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிப்காட் தீயணைப்பு துறையினர்  தொழிற்சாலையில் பாதிக்கப்பட்டபர்களை மீட்க சென்ற போது அதில் தீயணைப்பு வீரர் வெங்கடசாமி என்பவரும் மயக்கமடைந்த நிலையில், ஆக மொத்தம் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஆலை நிர்வாகம் தரப்பில் மேலாளர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:- 

வழக்கமாக ஆலையில் பகல், இரவு என 2  நேர ஷிப்ட் நடக்கும். இதில் இரவு நேரத்தில் பணியில் வேலைக்காக இருந்தவர்கள் உணவு அருந்த சென்ற நிலையில், ஏசி-யின் வயர் கசிவு ஏற்பட்டது. அப்போது, லேசாக தீபிடித்து எரிந்து புகை மண்டலமாகியது. பின்னர், அந்த புகை மண்டலம் பரவிய நிலையில், தொழிலாளர்கள் பயந்து அலறி ஓடினர். அதில் சில  பெண் தொழிலாளர்கள் கீழே விழுந்தனர். அப்போது, மூச்சு திணறல் ஏற்பட்டது. பின்னர், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

பின்னர், தீயணைப்புத் துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்து இரண்டு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. இதில் பாதிப்பு 17 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.மேலும், இன்று பணியாளர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேறு ஒரு தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு ஆண், பெண் என தொழிலாளர்கள் 125 பேர் இருந்தனர்.  தற்போது அதிகாரிகள் தீ விபத்து நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

  • Share on

குளத்தூரில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

குறுக்கு சாலையில் இருசக்கர வாகனங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மோதி விபத்து : போலீசார் விசாரணை!

  • Share on