
செய்துங்கநல்லூரில் காவல் நிலையம் அருகிலேயே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து துணிகரமாக கூடுதல் விலைக்கு விற்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், நேற்று செய்துங்கநல்லூர் காவல் நிலையம் எதிரே திருச்செந்தூர் - நெல்லை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் இளம்பெண் ஒருவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் ஸ்டீபன்ஜான் மற்றும் போலீசார் மது விற்று கொண்டிருந்த இளம் பெண்ணை பிடித்தனர்.
விசாரணையில், அவர் கருங்குளம் பகுதியை சேர்ந்த பரமசிவன் மகள் இசக்கித்தாய் (35) என்பதும் இவர் செய்துங்கநல்லூர் பகுதியில் தொடர்ந்து சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 60 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கித்தாயை கைது செய்தனர். காவல் நிலையம் அருகிலேயே துணிகரமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.