கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் வேன் உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சையா மகன் மாடசாமி. இவர் தனக்கு சொந்தமான வேன் மூலம் தனியார் மில்லுக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்று வரும் வேலை செய்து வந்துள்ளால். இந்தநிலையில், அவர் கடந்த 15-ஆம் தேதி இரவு மூப்பன்பட்டி சுடுகாட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் ஆய்வாளர் சுகாதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட மூப்பன்பட்டி திருமங்கை நகரை சேர்ந்த ஞானசேகர் மகன் முகில் ராஜ் (வயது 19), 2 சிறுவர்கள் என 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலையான மாடசாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான கோபி என்பவருக்கும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஆத்திரமடைந்த மாடசாமி மது போதையில் கோபி வீட்டிற்கு சென்று அவரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபி தனது மகன் பார்த்திபனுடன் (22) சேர்ந்து மாடசாமியை கொலை செய்ய முடிவு செய்து திட்டம் தீட்டி உள்ளார்.
இதையடுத்து, பார்த்திபன், தனது நண்பர்களான முகில்ராஜ் மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் மூலம் மாடசாமியை மது குடிக்க அழைத்துள்ளார். இந்த 3 பேரும் மாடசாமிக்கு தெரிந்தவர்கள் என்பதால், அவரும் மது குடிக்க அவர்களுடன் சென்றுள்ளார். அவர்கள் மாடசாமியை மூப்பன்பட்டி சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு மறைந்திருந்த கோபியும், பார்த்திபனும் வந்து மாடசாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்ததாகவும், பின்னர் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் முகில்ராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கோபி, அவரது மகன் பார்த்திபனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.