• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே தந்தையின் இறப்புக்கு காரணமான மகனுக்கு 10 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

விளாத்திகுளம் அருகே தந்தையின் இறப்புக்கு காரணமான மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா விருசம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ஆத்தியப்பன் (60). இவரது மகன் குருசாமி (27). இவர்கள் 2 பேரும் கடந்த 18.4.2022 அன்று வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.


அப்போது, ஆத்தியப்பனின் மற்றொரு மகனான கூலித் தொழிலாளி விஜயகுமார் (35) என்பவர் அங்கு வந்தார். அவர் ஆத்தியப்பனிடம் மது குடிக்க பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தந்தையும், மகனும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். உடனடியாக குருசாமி 2 பேரையும் விலக்கி விட்டு உள்ளார்.


இதனால், ஆத்தியப்பன் அங்கிருந்து அருகில் உள்ள வீட்டின் மாடிப்படியில் சென்று அமர்ந்து இருந்தார். அதே நேரத்தில் விஜயகுமார் வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்துக் கொண்டு ஆத்தியப்பனை குத்துவதற்காக ஓடினார். உடனடியாக குருசாமி தடுத்து நிறுத்தி உள்ளார். இதனை பார்த்த ஆத்தியப்பன் பதற்றமடைந்து மயங்கி விழுந்து இறந்து விட்டார்.


இதுகுறித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் போலீசார் விஜயகுமார் மீது 304 (2) (கொலை செய்யும் நோக்கம் இல்லையென்றாலும், இறப்புக்கு காரணமானவர்) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த வழக்கு, தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலவன், குற்றம் சாட்டப்பட்ட விஜயகுமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜரானார்.

  • Share on

சாத்தான்குளத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா : போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு!

வேன் உரிமையாளர் கொலையில் சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது : நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

  • Share on