தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்படவ உள்ளது. இதற்காக முதலில் கிராமத்தில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற இருந்த நிலையில், தற்போது ஊருக்கு வெளியே கட்டுவதற்கு முடிவு செய்து பணிகள் தொடங்கியுள்ளது.
ஊருக்கு வெளியே அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டால் குழந்தைகள் செல்வதற்கு சிரமம் ஏற்படுவது மட்டுமின்றி பாதுகாப்பாற்ற சூழ்நிலை ஏற்படும் என்றும், அப்பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர், கிணறு அருகில் இருக்கும் சூழ்நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் அமைப்பது பாதுகாப்பாக இருக்காது என்றும், மேலும் நடைபாதையில் அங்கன்வாடி மைய பணிகளுக்காக குழி தோண்டியுள்ளதால் மக்கள் செல்ல முடியாத நிலை இருப்பது மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு மக்கள் வழிபாடு நடத்த செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி ஊருக்குள் உள்ள இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கினர்.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால், அகில இந்திய பார்வார்டு பிளாக் வடக்கு மாவட்ட செயலாளர் அழகுபாண்டி, தமிழ்ப்பேரரசு கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன், பசும்பொன் ரத்ததான கழக தலைவர் செண்பகராஜ், வீரவாஞ்சி நகர் பகுதி தலைவர் மாயக்கண்ணன், பொன்னுப்பாண்டியன், வழக்கறிஞர்கள் செந்தில்குமார், சுரேஷ், மாரிக்கண்ணன், நாகராஜ், ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.