தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் காமராஜ், கோபிநாத். இவர்கள் பல்லாக்கு ரோடு சாலையில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடையில் முன் பேப்பரால் சுற்றப்பட்டு ஒரு பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்த சகோதரர்கள் அந்த பேப்பரை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு தாலி செயின் தங்க நகை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த நகையை சகோதரர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில்,கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சேர்ந்த முத்து என்பவரது மனைவி மகாலெட்சுமி. இவர் செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே டெய்லரிங் ஷாப் நடத்தி வருகிறார். இவரது 3 பவுன் தாலி செயின் காணவில்லை என்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்லாக்கு சாலையில் பலசரக்கு கடை பகுதியில் கிடந்த தாலி செயின் மகாலெட்சுமிக்குள்ளது என்பது தெரியவந்தது.
இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்பாண்டி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் மகாலெட்சுமியிடம் நகையை ஒப்படைத்தனர்.
கடையின் முன் கிடந்த நகையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சகோதரர்கள் காமராஜ், கோபிநாத் ஆகியோரை போலீசார் பாராட்டினர்.