தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். இந்த ஆதிச்சநல்லூரில் தான் இந்தியாவிலேயே முதன் முறையாக தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் 5 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதில் குறிப்பாக தமிழகத்தின் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து உடனடியாக மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டலம் சார்பில் இதற்கான பணிகள் தொடங்கியது. முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடந்தது. அதில் பி சைட்டில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் அதே இடத்தில் காட்சிப்படுத்தும் வண்ணம் உலகத்தரம் வாய்ந்த சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் தான் இந்தியாவிலேயே முதன் முறையாக அமைக்கப்பட்ட சைட் மியூசியம். எடுத்த பொருட்களை அதே இடத்தில் வைத்து காட்சிப்படுத்துவதே சைட் மியூசியம். இந்த சைட் மியூசியத்தை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் இந்த சைட் மியூசியத்தினை காண தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் பகுதியில் ஏற்கனவே அகழாய்வு செய்யப்பட்டிருந்த குழிகளை பாதுகாக்க மேற்கூரைகள் அமைத்து பணிகள் நடந்து வந்தது.
தற்போது அகழாய்வு பணிகள் முழுமையும் முடிந்த பின்னர் மற்ற குழிகள் அனைத்தும் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும் அதன் மேல் உள்ள தற்காலிக மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அருங்காட்சியகத்தை காண வருபவர்கள் மேல் அந்த தற்காலிக ஓலை கூரை விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அடித்த சூறைக் காற்றின் போது ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் அருகே அமைக்கப்பட்டிருந்த கூரை செட் கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் யாரும் அந்த இடத்தில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் அருகே உள்ள கூரைகளும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதிக்கு பணியாளர்களை நியமனம் செய்து ஓலை கூரைகளை பராமரித்து, வருகின்ற பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.