ஏரல் அருகே பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனிப்பெருந்திருவிழாவில் திரளான பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இராமபிரான் இராவனனை போர்புரிந்து வெல்ல காரணமான இடமாக குரங்கணி கூறப்படுகிறது. தன் வானர சேனையை அணிவகுத்து நின்ற இடமாக அதாவது குரங்கு அணிவகுத்து நின்ற இடம் குரங்கணி ஆகும். ராவணன் சீதா தேவியை விண்ணில் கவர்ந்து சென்றான். அப்போது இராமபிரானுக்கு அடையாளம் காட்டவே தம் கழுத்தில் கிடந்த முத்துமாலையை எடுத்து வீசினாள் அன்னை. புஷ்பக விமானத்தில் இருந்து வீசிய முத்துமாலை விழுந்த இடம் குரங்கணி. காசியில் சக்தியின் காதணி விழுந்த இடத்தில் விசாலாட்சி தோன்றினாள். அதுபோலவே தாமிரபரணிக்கரையில் விழுந்த முத்துமாலை ஜோதி பிழம்பாய் காட்சியளித்தது. அந்த மாலை அம்மன் ரூபத்தில் இங்கே இருந்து அருள் வழங்க ஆரம்பித்தாள். முத்து மாலையில் வந்த அம்மன் முத்துமாலை அம்மன் என்று அழைக்கப்பட்டார்.
இந்த கோவிலில் ஆனித்திருவிழா வருடம் தோறும் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் கால்நாட்டுடன் தொடங்கியது. முத்துமாலையம்மனை வணங்க திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
திருவிழாவை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு, முத்துமாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்து வருகின்றனர். கோவில் முன்பு பிஸ்கட்டால் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதன் அருகே நின்று பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். ஏராளமான பக்தர்கள் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட கை, கால்கள் ஆகியவைகளை நேர்ச்சையாக பக்தர்கள் செலுத்தி வருகிறார்கள். 1 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் முத்துமாலையம்மனை வழிபாடு செய்து வருகின்றனர்.
இரவு கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல், நள்ளிவு 12 மணிக்கு வானவேடிக்கை அதனை தொடர்ந்து 1 மணிக்கு நாராயணன் பாமா ருக்மணியுடன் திருவீதி உலா வருதல் நடைபெறும்.