ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் கோவிலில் 424வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையில் ஆலயம் எழுப்பப்பட்டு 424 ஆண்டுகள் ஆகிறது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 6.30 மணிக்கும் முதல் திருப்பலி நடந்தது. மாலை 4 மணி அளவில் புனித சந்தியாகப்பர் சொரூபம் வண்ண விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு சந்தியாகப்பர் ஆலயம் முன்பிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வேனில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அதன்பின் ஊர் பங்குமக்கள் கொடிகள் ஏந்தி புனித சந்தியாகப்பரை போற்றி பக்தியுடன் பாடல்கள் பாடியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். மாலை 6 மணிக்கு ஆலய முன்புள்ள கொடிமரத்தில் கொடிகளை மந்திரித்து பங்குத்தந்தை ரொனால்டோ தலைமையில் அருட்தந்தை கிஷோர் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. இதில் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் தூத்துக்குடி மற்றும் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து 7 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் நற்கருணை ஆராதனையும் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் திருவிழா வரும் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 10 மணிக்கு ஆலய திருத்தேரில் மாதாவும் சப்பரத்தில் புனித சந்தியாகப் பெறும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.