ஜமீன் கரிசல்குளத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, கர்மவீரர் காமராஜரின் பிறந்த தினமான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜமீன் கரிசல்குளம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.