விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் நடந்த கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவில், தூத்துக்குடி மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஜாண் பிரிட்டோ தலைமை தாங்கினார். முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் தலைவர் இருதயராஜ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நரசிம்மன், தாவீதுராஜா, அமல்ராஜ், சதீஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்று அங்குள்ள காமராஜர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து மரியாதை செலுத்தினர். முன்னதாக வேம்பார் பஸ் நிறுத்தத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் தொம்மை குரூஸ் காங்கிரஸ் கொடி ஏற்றினார். பின்னர் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இனிப்புகள் வழங்கினர்.
அதேபோல், பெரியசாமிபுரம் கிராமத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பெரியசாமிபுரம் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ராபர்ட் பெல்லார்மின் தலைமையில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
எட்டயபுரத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா
எட்டயபுரம் கான்சாபுரம் பேருந்து நிறுத்தம் முன்பு காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பின் சார்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் மைதீன் துரை தலைமை தாங்கினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.