சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பஞ்சாயத்தில் உள்ள டி.என்.டி.ஏ தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் பொன் முருகேசன் தொடங்கி வைத்தார்.
தமிழக முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பஞ்சாயத்தில் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் கீழ் உணவு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் காமராஜர் பிறந்தநாள் விழா டி.என்.டி.ஏ தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காமராஜர் புகழை கொண்டாடும் விதமாக, அப்பள்ளியின் மாணவி ஒருவர் மலர்களின் நடுவினில் ஒரு ரோஜா மக்களின் மத்தியில் காமராஜர் என மழலை குரலில் பாடிய பாடல், காமராஜரை பற்றி ஆங்கிலத்தில் சரளமாக சரவெடியாக பேசிய மற்றொரு மாணவியின் பேச்சும் காண்போரை அசத்தியது. மாணவிகளுக்கு அங்கு கூடியிருந்தோர் கைதட்டி ஆரவாரமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
முன்னதாக, மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பொன் முருகேசன் சர்க்கரை பொங்கல் மற்றும் காலை உணவுகளை பரிமாறினார்.