விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முனியசாமி திருக்கோவில் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு, சூரங்குடி தேவேந்திரகுல சமுதாய பொதுமக்கள் சார்பாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, தேன்சிட்டு, சின்னமாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
இதில், இராமநாதபுரம், மதுரை,தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் மற்றும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, திமுக பிரதிநிதி இம்மானுவேல் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சூரங்குடி தர்மகத்தா ஆறுமுகம் மற்றும் தேவேந்திரகுல சமுதாய பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சின்னூரில் மாட்டு வண்டி பந்தயம்
விளாத்திகுளம் அருகே உள்ள சின்னூரில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் கருப்பசாமி திருக்கோவிலின் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்னமாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு என மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் 83 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.