தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி சின்னமணி நகர் இறகுபந்து விளையாட்டு கழகம் சார்பில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி தூத்துக்குடி அசோக் நகரில் உள்ள மாநகராட்சி மேற்குமண்டல இறகுபந்து விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இப்போட்டி துவக்கவிழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட இறகு பந்து தலைவர் பி.எஸ்.டி.எஸ்.டி.வேல் சங்கர் தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் முன்னிலை வகித்தார். சின்னமணி நகர் இறகுபந்து விளையாட்டு கழகம் தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான சந்திரபோஸ் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் என். பி.ஜெகன் பெரியசாமி போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் பொன்னப்பன், தொழிலதிபர்கள் லட்சுமணன், சேகர், லெனின், செல்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் செயலாளர் ரமேஷ் கார்த்திகேயன் நன்றி கூறினார். இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 55 அணிகள் பங்கேற்கின்றன. இதன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.