குரங்கணி ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோவில் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் கோவில் புறக்காவல் நிலையத்தில் வைத்து இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டம், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏரல் தாலுகா குரங்கணி கிராமத்தில் ஸ்ரீமுத்துமாலையம்மன் திருக்கோவில் ஆனித் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் கோவில் புறக்காவல் நிலையத்தில் வைத்து நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமை நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லா பாய், உதவி ஆய்வாளர் செல்வன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில், திருவிழா போக்குவரத்து ஏற்பாடுகள், வாகனம் நிறுத்தும் இடங்கள், தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் பகுதிகள், ஆழமான பகுதிகளுக்கு எச்சரிக்கை பலகைகள், போதுமான மின்விளக்குகள் ஏற்பாடுகள், முக்கியமான பகுதிகளில் சி சி டிவி கேமரா பொறுத்தவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.