ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி மற்றும் வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் பருத்தி எடுக்கும் பணிக்காக லோடு ஆட்டோவில் சென்றுள்ளனர். லோடு ஆட்டோவை கவர்னகிரி தெற்குதெருவை சேர்ந்த அற்புதமணி (30) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
வேலையை முடித்து மீண்டும் லோடு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். மேலும், லோடு ஆட்டோவின் பின்பக்க டோரில் நான்கு பெண்கள் அமர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் வாகனமானது வெங்கடாசலபுரம் கிராமத்தில் இருந்து வெள்ளாரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக, பின்பக்கடோர் உடைந்ததில் வீரன் சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்த சுப்புக்கனி (45), கவர்னகிரியை சேர்ந்த வீரலட்சுமி (35), முத்துமாரி (40), சசிகலா (48) ஆகிய நான்கு பேரும் காயமடைந்துள்ளனர். இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுப்புகனியை பரிசோதித்த மருத்துவர்கள் சுப்புகனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வீரலட்சுமி பலத்த காயமடைந்த நிலையிலும், முத்துமாரி மற்றும் சசிகலா ஆகிய மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களை ஓட்டப்பிடாரம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.