கோவில்பட்டி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லாயல்மில் காலனி பகுதியில் உள்ள கண்மாய் அருகே நாகராஜ் என்பவருக்கு சொந்தமான பராமரிப்பு இன்றி கிடக்கும் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் 24 மூட்டைகளில் சுமார் 1200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.