ஓட்டப்பிடாரம் அருகே வீரன் சுந்தரலிங்கம் நகரில் காதலித்த பெண் பேச மறுத்ததால் பெண்ணின் தந்தையை அரிவாள் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் லட்சுமணன் (57). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர். இதில் மூவருக்கு திருமணம் ஆன நிலையில், இளைய மகள் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், அப்பெண்ணும் மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பாரதிராஜா (24) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாரதிராஜாவிற்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகி விவாகரத்து பெறாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் வீட்டில் அவரை சத்தம் போட்டதால் பாரதிராஜாவிடம் அப்பெண் பேசவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த பாரதிராஜா, இரு சக்கர வாகனத்தில் வீரன் சுந்தரலிங்கம் நகரில் இருந்து ஓட்டப்பிடாரம் நோக்கி சென்று கொண்டிருந்த பெண்ணின் தந்தை லட்சுமணனை வழிமறைத்து, உன் மகள் என்னிடம் பேசாமல் இருப்பதற்கு இருக்கு நீ தான் காரணம் என தான் மறைத்து வைத்திருந்த அரிவாளாலை எடுத்து வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் லட்சுமணனுக்கு லேசான வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் லட்சுமணனை மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.