எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி பேரூராட்சி அலுவலகத்தை ஆட்டுக்குட்டிகளுடன் சென்று பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பேரூராட்சி ஆட்டுச் சந்தையில் ஆடு வாங்க வருவோர் மற்றும் விற்க வருவோரிடம் வசூலிப்பதற்காக ஆடு ஒன்றிற்கு அரசு ரூ.60 கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை கூடுதலாக ரூ.40 அதிக வசூல் செய்யபடுவதாக கூறியும், எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை, தார் சாலை போன்ற பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும், அச் சாலைகளை முறையாகவும் உடனடியாகவும் அமைக்கக்கோரியும் வலியுறுத்தி எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்தி ராஜ், நாகராஜன், மாவட்ட நெசவாளர் அணி துணை தலைவர் நாகராஜன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் அவர்களிடம் மனுவை பெற்றுகொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்ததன் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதில், ஒன்றிய பொதுச் செயலாளர் ஹரிஹரசுதன், மாவட்ட ஆன்மீக பிரிவு தலைவர் ராம்கி மற்றும் பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.