தூத்துக்குடியில் இருசக்கவாகனத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் ராம்குமார் (20). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்தார். கடந்த 3 மாதமாக கல்லூரிக்கு செல்லாமல் வேலைக்கு சென்று வருகிறாராம். இந்நிலையில் கல்லூரியில் தனது சான்றுகளை வாங்குவதற்காக இருசக்கரவாகனத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.
முள்ளக்காடு - காந்திநகர் சந்திப்பு அருகில் வரும் போது எதிரே வந்த மினி லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராம்குமார், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் செந்தில் வேல்குமார் வழக்குப் பதிந்து, லாரியை ஓட்டி வந்த திருநெல்வேலி டவுன் சிக்கந்தர் புரத்தை சேர்ந்த முகமது பாட்சா மகன் சேக் அலி (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.