ஓட்டப்பிடாரம் அருகே பி.சுப்பிரமணியபுரத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் மீது ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பி.சுப்பிரமணியபுரம் மேலத்தெருவை சேர்ந்த மயில்வாகன பெருமாள் மனைவி ஜோதிலட்சுமி (38). இவர் ஜூலை 10 இன்று மதியம் ஊரில் உள்ள தெரு குழாயில் குடிதண்ணீர் எடுத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்த, பெரியநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (20) என்பவர் திடீரென ஜோதிலட்சுமி வீட்டிற்குள் சென்று அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்துள்ளார்.
உடனே சுதாரிக்கொண்ட ஜோதிலட்சுமி கூச்சல் போடவே, பாலமுருகன் தாலி செயினை கீழே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இச்சம்பவம் குறித்து ஜோதிலட்சுமி ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.