இந்து முன்னணி மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளையில் நடைபெற்றது. அப்போது இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கல்யாண விநாயகர் சன்னதி முன்பு திருமணங்கள் நடைபெறும். தற்போது அதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். திருச்செந்தூர் கோவிலில் வழங்கப்பட்டு வந்த இலை பிரசாதத்தை மீண்டும் வழங்க வேண்டும். கோயிலில் பள்ளியறை நிகழ்ச்சிகளின் போது பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். கோயில்களில் விவசாயிகள் காணிக்கை செலுத்த அனுமதிக்க வேண்டும்.
பக்தர்களை அங்கபிரதிஸ்டம் செய்ய அனுமதிக்க வேண்டும். பல கோடி கணக்கான வருமானம் வரக்கூடிய கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படாத மாவட்டங்களில் பக்தர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம். திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமான அரசாக செயல்படுகிறது.
பள்ளிகூடங்களுக்கு மாணவர்கள் கயிறு கட்ட கூடாது. விபூதி அணிந்து வரக்கூடாது என பல்வேறு கட்டுபாடுகளை விதிக்கும் ஆய்வறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தாக்கல் செய்துள்ளார். ஆனால் சிலுவை போட்டு வரக்கூடாது. பர்தா அணிந்து வரக்கூடாது என கூறவில்லை. இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் அவரை இந்து முன்னணி கண்டிக்கிறது.
தமிழகத்தில் போதை பொருள் விற்பனை அதிகமாக இருக்கிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதில் அதிகமாக ஈடுபடுகின்றனர். முதல்வரோடு நெருக்கமாக இருந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள சாதிக்குக்கு சர்வதேச அளவில் தொடர்பு உள்ளது. உளவுத்துறை சரியாக செயல்படவில்லை எனில் வருங்கால சந்ததியினர் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. காங்கிரஸ் மாவட்ட தலைவர், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், அதிமுக, பாமக என பல்வேறு கட்சி தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதனால் தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக அரசு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். இந்து தெய்வங்களை வணங்குபவர்களை ஆ.ராசா சூத்திரன் என தெரிவித்துள்ளார். ஆனால் திமுக தலைவரின் மனைவியும் இந்து தெய்வத்தை வணங்குகின்றார் இது அவர்களுக்கும் பொருந்துமா? என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் பேசினார்.