தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தவிளை கிராமத்தில் அருள் தரும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் தலைமை வகித்து விழாவினை தொடங்கி வைத்தார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரம்மாச்சாரிய சுவாமி கூறுகையில்:-
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இன்றுடன் 66 பேர் உயிரிழந்தனர். இது ஒரு வருந்தத்தக்க விஷயம். மாணவர்கள் பாஸ்மார்க்கை நோக்கி பயணிக்கிறார்களோ இல்லையோ டாஸ்மாக்கை நோக்கி பயணிக்கின்றனர்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று கனக சபை நிகழ்வில் அனைத்து மக்களும் தரிசனம் செய்ய அனுமதி அளித்தது அனைவருக்கும் மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் ஜேஇஇ தேர்வில் பழங்குடியின மாணவி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு கொடுமையாக செயல். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்.
இவை அனைத்தும் நடந்தும் மக்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போடப் போகிறார்கள். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தான் ஜெயிக்கப் போகிறது என மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரம்மாச்சாரிய சுவாமி தெரிவித்தார்.