கோவில்பட்டியில் மாமனாரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் நேருஜி காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ் (50). கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மகள் சினேகாவுக்கும், பாரதி நகரைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் மரம் வெட்டும் தொழிலாளியான முத்துக்குமாருக்கும் (28) கடந்த 2017-ல் திருமணம் நடந்தது.
முத்துக்குமார் மது அருந்திவிட்டு வந்து தினமும் மனைவியிடம் தகராறு செய்வாராம். கடந்த 10 நாள்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில், சினேகா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டாராம். இதனையடுத்து ஜூலை 3-ம் தேதி சினேகாவின் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற முத்துக்குமார் அவருடன் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் சினேகா புகார் அளித்தார்.
இந்நிலையில், நேற்றும் அங்கு சென்ற முத்துக்குமார் மீண்டும் தகராறு செய்து, அவரது மாமனார் நாகராஜை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த நாகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, முத்துக்குமாரும் விஷமருந்தியதா கூறப்படுகிறது. இதுகுறித்து நாகராஜ் மனைவி வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மாமனாரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை கைது செய்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.